சென்னை: தமிழ்நாடுஅரசு வீடு கட்ட ஏழை மக்களுக்கு ரூ.3.5 லட்சம் தரப்போகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டம் அடுத்த மாதம் அமலுக்கு வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் யாருக்கெல்லாம் பணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டசபையில் 2024-25-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கலைஞர் கனவு இல்லம் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். இந்த திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சித்துறை கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட்டிருந்தது. இந்த திட்டம் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் (ஜூன்) முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வர போகிறது.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று இந்த திட்டத்தை ஆரம்பிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பினாராம். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக இன்னும் சில நாட்கள் கழித்து அமலுக்கு வரப்போகிறதாம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளில் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திட்டம் தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் பொன்னையா, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அண்மையில் அனுப்பினார்.
இந்த அறிக்கையின் படி, “குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் விதமாக கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2024-25-ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக இந்த நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு ரூ.3 ஆயிரத்து 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
விதிமுறைகள் விவரம்: ஒரு கிராமத்தில் ஏற்கனவே பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 25 முதல் 50 வீடுகள் கட்டுவதற்கு ஏற்கனவே ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருந்தால் அந்த கிராமத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தப்படாது. அதேபோல் ஒரு கிராமத்தில் கிராமப்புற வீடு திட்டத்தின் கீழ் 50 வீடுகளுக்கு மேல் பழுதுபார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் செயல்படுத்தப்படாது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை வீடுகள் கட்ட திட்டமிடப்படுகிறது என்கிற விவரத்தினை மே 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ரூ.3.5 லட்சம் யாரெல்லாம் கிடைக்கும்: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 360 சதுர அடி இடம் நிலம் இருக்க வேண்டும். அதில் 300 சதுர அடி கான்கீரிட் கட்டிடம் கட்டவேண்டும். இந்த வீட்டின் சுவர் மண்சுவர் மற்றும் மண் சாந்து மூலம் கட்டப்படக்கூடாது என்று விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக சொந்தமாக பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள். புறம்போக்கு இடத்தில் குடிசை போட்டிருப்பவர்கள் இதில் வீடு கட்ட முடியாது. சொந்தமாக கான்கிரீட் வீடு இருப்பவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெற முடியாது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெற குடிசை வீடுகளில் வாழ்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் ரூ.3.5 லட்சம் பணம் வீடு கட்ட கிடைக்கும். குடிசையில் ஒருபகுதி கான்கீரிட், ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட்டு இருந்தாலும் பணம் கிடைக்காது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி வீடு கட்ட கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி வழங்கப்படும். பயனாளிகளுக்கான தொகை வங்கி கணக்கு மூலம் வழங்கப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி ஒவ்வொரு வீட்டிற்கும் ஒதுக்கீட்டு தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். அதில் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேநேரம் மீதமுள்ள ரூ.40 ஆயிரத்தை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு 90 மனிதசக்தி நாட்கள் மூலம் ரூ.28 ஆயிரமும் (வேலை ஆட்கள் கூலி), ஸ்வட்ச் பாரத்தின் கீழ் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரமும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளை ஊராட்சி மன்ற தலைவர், உதவி பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய மேற்பார்வையாளர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகியோர் கொண்டு குழு தேர்வு செய்யும்.