ஓய்வு காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்று பலரும் பணியில் இருக்கும் போதிலிருந்து சிந்திக்ககூடும். பல்வேறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் அரசாங்கத்திட்டங்கள் இருப்பதால் எந்த திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்று பலருக்கும் குழப்பம் வரலாம். அதிலும் குறிப்பாக PPF மற்றும் NPS போன்ற திட்டங்கள் பல முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கும் திட்டங்களாக உள்ளன. நீங்கள் ஓய்வுக்காக முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் இந்த இரண்டு திட்டங்களில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம்.
PPF என்றால் என்ன?: பொது வருங்கால வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற PPF என்பது இந்திய அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்படும் சேமிப்பு திட்டமாகும். இது ஆபத்து இல்லாத முதலீட்டு திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 வருட முதிர்வுக்காலத்துடன், நீண்ட காலத்திற்கு தங்கள் நிதியைத் முதலீடு செய்ய விரும்புவோருக்கு PPF திட்டம் சிறந்தத் தேர்வாக இருக்கும். இந்தத் திட்டம் தற்போது 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும் பெறப்படும் அசல் மற்றும் வட்டிக்கு முற்றிலும் வரி இல்லை.
PPF திட்டத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். PPF திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு 1.5 லட்சம். PPF திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள். இதில் போடப்படும் முதலீடு பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் அரசாங்கத் திட்டம் என்பதால் எந்தவித அபாயமும் இருக்காது உத்தரவாதமான வருமானம் பெறலாம்.
NPS: பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதிக வருமானம் கிடைக்கும், ஆனால் அபாயகரமானது. நேஷனல் பென்ஷன் ஸ்கீம் என்று சொல்லப்படுகிற தேசிய ஓய்வூதிய திட்டம் என்பது ஓய்வு காலத்தில், ஒருவருக்கு தேவையான வருமானத்தை ஏற்படுத்தித் தரும் நோக்கில் கொண்டுவரப்பட்ட திட்டமாகும். இந்தத் திட்டத்தினை பயன்படுத்தி ஒருவர் ஓய்வு பெறும் காலத்தில், பாதுகாப்பான வருமானத்தை பெற முடியும். பணியாளர்களாக இருக்கும் நபர்கள் தங்களது ஓய்வு காலங்களில் வருமானம் நின்று போகும் நாட்களை திறம்பட கழிப்பதற்கு இந்தத் திட்டம் உதவியானதாக இருக்கும்.
இந்தத் திட்டம் முதிர்ச்சி அடையும் போது, இதன் மூலம் பெறப்படும் முதிர்வு தொகையானது, வரையறுக்கப்பட்ட வருமானமாக இருக்கும் என்று நம்மால் கூற முடியாது. ஏனெனில், இந்த கார்பஸ் முழுவதுமாக பங்குகள் மற்றும் பத்திரங்களின் செயல் திறனை பொறுத்தது. NPS-இல் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரிச் சட்டத்தின் 80CCE பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்குகளைப் பெறலாம். கூடுதலாக, 1.5 லட்சம் வரம்பிற்கு மேல் பிரிவு 80CCD(1B) இன் கீழ் 50,000 கூடுதல் வரி விலக்கு பெற முடியும்.
யார் எதை தேர்வு செய்ய வேண்டும்?: PPF: உத்திரவாதமான வருமானம், வரிச் சலுகைகள் மற்றும் அவர்களின் பணத்தை குறைந்த அளவிலான வருமானத்துடன் பாதுகாப்பாக வளர்க்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு சிறந்தது. NPS: அதிக வருமானம் பெற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. நீங்கள் அதிக அபாயத்தை எதிர்கொள்ள தயாராக இருந்தால், NPS உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
NPS மற்றும் PPF இரண்டும் சிறந்த முதலீட்டு விருப்பங்கள் ஆகும், மேலும் உங்கள் தேவைகளுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் நிதி இலக்குகள், அபாய சகிப்புத்தன்மை மற்றும் வரிச் சலுகைகளைக் கருத்தில் கொண்டு, NPS அல்லது PPF-இல் முதலீடு செய்யலாம்.