அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் விழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு படையெடுக்கிறார்கள். அவர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5 கோடியே 64 லட்சம் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற திருக்கோயில்களில் லிஸ்டில் டாப்பில் உள்ள கோயில் என்றால் அது பழனி தான். அதன்பிறகு தான் அத்தனை கோயில்களும் வரும். இந்த கோயில் கோவை,ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்ட மக்களுக்கு மிகவும் நெருக்கமான கோயில் ஆகும். தங்களின் ஒவ்வொரு விசேஷமும் பழனி முருகனின் ஆசிர்வாதத்துடன் நடைபெற வேண்டும் என்பதில் அதிக நம்பிக்கை கொண்ட மக்கள் இங்கு அதிகமாகும்.
இதேபோல் தென்மாவட்டங்களிலும் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குமே பழனி முருகனை அடிக்கடி போய் பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள். இதுதவிர கேரளாவில் உள்ள லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் இடமாகவும் பழனி முருகன் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலுக்கு விசேஷ நாட்களிலும் விடுமுறை நாட்களிலும், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள்.
பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும். இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த மாதம் ஆன்மீக மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தார்கள்.
இப்படி வந்த பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தினார்கள். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம் கோவில் நிர்வாகம் சார்பில், எண்ணப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே உண்டியல் நிரம்பியது. இதையடுத்து பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது ரூ.3 கோடியே 32 லட்சத்து 50 ஆயிரத்து 873, தங்கம் 1237 கிராம், வெள்ளி 21638 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 1012 கிடைத்திருந்தது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் 2-வது நாள் முடிவில் ரூ.2 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரத்து 564, தங்கம் 375 கிராம், வெள்ளி 6611 கிராம், வெளிநாட்டு கரன்சி 722 கிடைத்தது. ஒட்டுமொத்தமாக உண்டியல் காணிக்கை மூலம் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.5 கோடியே 64 லட்சத்து, 69 ஆயிரத்து 457, தங்கம் 1612 கிராம், வெள்ளி 28249 கிராம், வெளிநாட்டு கரன்சி 1734 கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.