PMFBY என்று சொல்லக்கூடிய பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டம் பற்றி தெரியுமா? விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்தின் பலன்கள் என்னென்ன? விவசாயிகள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? இதற்கான தகுதிகள் என்னென்ன?
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம்தான்.. அதனால்தான், விவசாயிகளின் நலனில் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே ஏராளமான நலத்திட்டங்களையும், கடனுதவியையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.
குறிப்பாக, பிஎம் கிசான் எனப்படும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டமும் ஒன்றாகும்.. விவசாயிகளுக்கு பண உதவிகளை, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் 6000 ரூபாய் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்கிறது மத்திய அரசு.
அதேபோல, விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதுதான் கிசான் கிரெடிட் கார்டு திட்டம். அந்த வரிசையில், PMFBY என்று சொல்லக்கூடிய பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டமும் மிக முக்கியமான திட்டமாகும்..
பருவநிலை மற்றும் நோய் தாக்குதல் காரணமாக பயிர் செய்திருக்கும் விவசாயிகள் நஷ்டமடைவதை பயிர்காப்பீடு தடுக்கிறது..
பயிர்க்காப்பீடு: அதாவது, பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் விவசாயிகள் காப்பீடு செய்த விளை நிலங்களில் இயற்கை பேரழிவு மற்றும் பிற அறிவிக்கப்பட்ட அபாயங்கள் காரணமாக பயிர் இழப்பு ஏற்பட்டால், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
உணவு தானிய பயிர், எண்ணெய் வித்து பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகையில் 1.5%, தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் பணப் பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகையில் 5% செலுத்த வேண்டும்.
விவசாயிகள் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.482 பிரீமியம் செலுத்திவேண்டும். காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 32 ஆயிரத்து 160 கிடைக்கும். மக்காச்சோளம்: நெல், மக்காச்சோளம், பருத்தி, வெங்காயம் போன்ற பயிர்களுக்கு இந்த காப்பீடு பொருந்தும். அதேபோல, விவசாயிகள் மட்டுமல்லாமல், நில உரிமையாளர், பங்குதாரர்கள், குத்தகைதாரர் போன்றோர் இந்த திட்டத்தின்மூலம் பலன் பெறலாம்..
தகுதிகள்: பயிர்காப்பீடு செய்யக்கடன் வாங்காத விவசாயிகளே இந்த திட்டத்துக்கு தகுதியானவர்கள்.. பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள் கடன் பெறும்போதே அவர்களின் நிலம் காப்பீடு செய்யப்படும். தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கி, பொதுச் சேவை (CSC) மையத்தில் வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பிரீமியம் செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம்.
இந்த திட்டத்தில் இணைய, முன்மொழிவு படிவம் மற்றும் விவசாயி பதிவு படிவம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு தேவை.. கடன்பெறா விவசாயிகளுக்கு செயல்பாட்டிலிருக்கும் மின்னணு பரிமாற்றசேவை உள்ள ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு இருப்பது அவசியம்.
அதேபோல, வங்கி எண்ணை மத்திய அரசின் காப்பீட்டு இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் விதைப்புச் சான்றிதழ் தேவைப்படும். விதையை விதைத்த ஒரு மாதத்தில் அடங்கல் போன்றவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.. இதுகுறித்து கூடுதல் தகவலை www.pmfby.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.