தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் கட்சிக்கான கொடி மற்றும் பாடலை இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்டார். அடுத்ததாக கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவிப்பதற்காக பிரமாண்ட மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் அங்கு இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 22 ஆம் தேதி கட்சிக் கொடி மற்றும் கட்சி பாடலை அறிமுகம் செய்தார். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை விஜய் ஏற்றி வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை வீடுகளிலும் கொடியை ஏற்றி வைக்க கோரி கூறினார். தொடர்ந்து பேசிய விஜய், இதுவரை நமக்காக உழைத்தோம். இனி மக்களுக்காக உழைக்க போகிறோம்.
தமிழ் மக்களுக்காக உழைக்க போகிறோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் என்று பேசிய நடிகர் விஜய், கட்சி கொடியில் உள்ளவற்றை வரும் மாநாட்டின் போது விளக்கமாக கூறுவதாகவும் பேசினார். கட்சியை அறிமுகம் செய்த விஜய், தொடர்ந்து கட்சி உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி என அடுத்தடுத்து கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வந்தார். அதன்படி தான் தற்போது கட்சி கொடி மற்றும் பாடலை அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்ட மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டின் போது தனது கட்சியின் கொள்கை கோட்பாடுகளை அறிவிக்க இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே கட்சி மாநாடு நடத்துவதற்கான இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்து வருவதாக தவெக நிர்வாகிகள் கூறி வருகிறார்கள். முதலில் நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்சி மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டதாகவும், தொடர்ந்து எல்லோரும் வந்து செல்ல வசதியாகவும் திருச்சியை தேர்வு செய்து அங்கு மாநாட்டை நடத்த திட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியது.
இதில், திருச்சியில் பல்வேறு இடங்களை தேர்ந்தெடுத்தாலும் கடைசி நேரத்தில் மைதானம் கிடைக்காமல் போனதாக கூறப்பட்டது. இதன்பின்னர் தான் திருச்சி பொன்மலை கார்னரில் உள்ள ரயில்வே மைதானத்தை தேர்வு செய்ததாகவும், ஆனால் அங்கும் கடைசி நேரத்தில் மைதானம் கிடைக்காமல் போனதாக தவெக நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து தான் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த திட்டமிட்டு, இதற்கான மைதானத்திற்கும் அனுமதி பெறப்பட்டதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் உடனே மாற்று இடம் தேவை என்ற காரணத்தால், தமிழக வெற்றிக் கழகத்தினர் மீண்டும் திருச்சி, தஞ்சை, சேலம் பகுதிகளில் இடங்களை தேடி வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எந்த மைதானம் உறுதியாகிறதோ, அதை பொறுத்து தான் மாநாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகும் என்று தவெக தரப்பில் கூறப்படுகிறது. விஜய் கட்சிக்கொடியானது மேல் மற்றும் அடிப்பகுதியில் சிவப்பு நிறமும், மத்தியில் மஞ்சள் நிறத்திலும் உள்ளது. மத்தியில் உள்ள மஞ்சள் நிறத்தில் இருபக்கமும் யானைகள் திமிறி எழுவது போன்றும் இதற்கு நடுவில் வாகை மலரும் அதனை சுற்றி பச்சை, நீல நிறத்திலான ஸ்டார்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் கட்சிக் கொடியை அறிமுகம் செய்த நிலையில், அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த கொடிகளை பகிர்ந்து வருகிறார்கள். தவெக கட்சியினரும் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ளனர். எனினும் விஜய் கட்சி கொடி அறிமுகம் ஆனதில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கட்சி கொடியில் யானையை பயன்படுத்தக் கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சி ஆனந்தன் கூறியுள்ளார். இதேபோல் கட்சிப் பாடல் லேசாக நான் அடிச்சால் தாங்க மாட்ட.. என்ற வேட்டைக்காரன் படத்தில் உள்ள சாயல் போல் உள்ளதாகவும் நெட்டிசன்கள் சிலர் விமர்சித்தனர்.
இதேபோன்று விஜய் பயன்படுத்திய காருக்கு ரூ.4500 பைன் இருந்ததாகவும், அதை விஜய் கட்டாமல் இருப்பதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து விஜய்யின் கட்சி கொடியின் மையத்தில் உள்ள வாகை மலரும் இது கிடையாது என்று விமர்சிக்கப்பட்டது. எனினும் ஒரு பக்கம் விமர்சனங்களை தாண்டி விஜய்க்கு ஆதரவு பெருகி வருகிறது. எனவே மாநாட்டை நடத்த விடாமல் செய்வதற்காக இடையூறு கொடுக்கப்படுவதாக தவெக மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அப்படித்தான் விக்கிரவாண்டியில் இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இதற்கு மாற்றாக மைதானங்களை தயாராக வைப்பதற்காக வேறு சில இடங்களையும் தேர்வு செய்து வருகிறார்களாம்.