24.9 C
New York
Friday, September 20, 2024

மகளிர் உரிமை தொகை போல் அடுத்த திட்டம்.. பெண்களுக்கு 5 லட்சம் தரும் அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

Share To Your Friends

மாதம் 1000 தரும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், ஆட்டோ வாங்க பெண்களுக்கு ஒரு லட்சம், தொழில் தொடங்க பெண்களுக்கு 50000 ரூபாய் என அடுத்தடுத்து பெண்களுக்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் விவசாய நிலம் வாங்க அதிகபட்சம் 5 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே மகளிருக்கு அரசு மாநகர பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தியது. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், மாதம் தோறும் 1000 பெறும் வகையிலான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தியது.

இதேபோல் தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர் நல வாரியத்தில், பதிவு பெற்ற பெண் ஓட்டுனர்கள், சொந்தமாக ஆட்டோ ரிக் ஷா வாங்குவது ஊக்குவிக்கும் திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது, மொத்தம், 500 பெண் ஓட்டுனர்களுக்கு புதிதாக ஆட்டோ ரிக் ஷா வாகனம் வாங்க, தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல் சுய தொழில் தொடங்க 50000 பெண்களுக்கு அரசால் வழங்கப்படுகிறது. 1 கோடி ஒதுக்கீட்டில் 200 பெண்களுக்கு சுயத்தொழில் செய்வதற்கு 50000 சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வழங்கப்படுகிறது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அடுத்ததாக தற்போது விவசாய தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உடைமையாளர்களாக உயர்த்தி சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ என்ற புதிய திட்டம் கடந்த பட்ஜெட்டின் போது தமிழ்நாடு அரசு அறிவித்தது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) சார்பில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம்,பெண்கள் விவசாயம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் விவசாய பயன்பாட்டுக்காக வாங்கப்படும் நிலத்துக்கு சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், அதிகபட்சமாக 2½ ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கி கொள்ள அரசு அனுமதித்துள்ளது. 5 லட்சம் பெற தகுதிகள்: இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரரின் தொழில் விவசாயமாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அவரது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ நிலத்தை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீத முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் வாங்கிய நிலத்தை 10 ஆண்டுகளுக்கு இன்னொருவருக்கு விற்பனை செய்யக்கூடாது. பயனாளிகள் வங்கி கடன் மூலமாக நிலம் வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் மானியத்துடன் விவசாய நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியின மகளிர், மாவட்டம் தோறும் செயல்பட்டு வரும் தாட்கோ மாவட்ட மேலாளரை அணுக வேண்டும். விண்ணப்பம் பெறப்படுகிறது இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த பெண்கள் விவசாய நிலம் வாங்கும் இந்த திட்டத்துக்காக 2024 2025 நிதியாண்டில் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது மாவட்டம் தோறும் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. தகுதியான ஆதிதிராவிட, பழங்குடியின மகளிர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்” என்று கூறினார்.


Share To Your Friends

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles